முத்தமிழும் விளைகின்ற வித்தகத் திருநாட்டில் - கொத்தாய்
நித்தமும் ஆயிரத்தார் வலைகட்கு மீந்தந்து,
முத்துகளும் சிற்பிகளும் சங்குகளை யும்தந்து,
எத்திக்கும் எமைச்சேர்க்கும் அலையார்த்த ஆழியே...!

ஞாலத்தின் முதல் தோன்றி மூத்தக்குடி யென்றாகி - உய்யும்
சீலத்தில் மானத்தில் யாவர்க்கும் வழிகாட்டி,
காலத்தா லின்றைக்குக் கயவர்க்கு உயிரீனுங்
கோலத்தைக் கண்ணுற்றந் தாங்கிடுமோ தமிழுதிரம்!

''அடுத்தவர்க்கு முதலுணவு அடுத்துதான் நமக்குணவு'' - என்றே
எடுத்தோதல் மட்டுமன்று.... நடப்பியல் காட்டுமினம்,
அடுக்காகப் பல்லுயிரை எமனுக்கு உணவாக்கித்
துடிக்கின்ற செய்கையினைப் பார்த்தப்பின்னும் உறங்குவையோ?

ஈழத்தின் மண்ணதிலே இருப்பதெங்கள் இனமடா! - உயர்
வேழத்தின் சீற்றாத்தைக் கொண்டதெங்கள் மனம்டா!
ஆழமாய்த் துயர்கண்டும் அஞ்சாத திண்மடா! - என்றே
ஆழியே அலையுயர்த்து! அவர்மனத்தி லிதைநிறுத்து....

''நல்மனத்தை உற்றாவர்கள் பிறர்நலனைப் பேணுகின்றார்! - மற்றாய்
அல்மனத்தை உற்றவரோ அவர்நலனே பேணுகின்றார்!!
கல்மனத்தார் நாளுமெமைக் காக்கைபோற் சுடுகின்றார்...!
''வல்தமிழர் ஒருசேர்ந்தால் வடுக்கூட இருக்காது!!''

-கவிஞர்। கலைமணி. மா.ஜெ. சசிக்குமார்

No comments: